Monday, May 2, 2011

மூன்றெழுத்தில் கவிதை அம்மா...!

அன்னைக்கு
----------------------

-சக்தி சக்திதாசன்

அன்னைக்கு ஒரு
அன்பான கடிதம்
அலைமோதும் நெஞ்சுடன்
அன்பான மைந்தன்

நீயில்லை அம்மா இன்று என்னோடு
நீயில்லாத உலகம் பகலில் இரவு
நின் நினைவில்லாமல் இதயம்
நின்று விடுமே அம்மா

வந்த துனபங்கள் யாவையும்
வரவாக வைத்துக் கொண்டு
இன்பங்கள் அனைத்தையும்
இரைத்தாய் எமக்குச் செலவாய்

சேமிப்பாய் உன்னிடம் இருந்தவை
செல்வங்கள் எம்மீது நீ கொண்ட அன்பு ஒன்றே.. நீ
சேர்ந்து விட்ட இடம் தெரியாமல்
சோர்ந்து விட்டதம்மா என் மனமும்

கண்களிலே அன்பு ஒன்றை மட்டுமே
கண்டேன் அம்மா உன்னிடத்தில்
கவலைகளை மட்டும் ஏனொ நீயும்
காட்டாமல் மறைத்து விட்டாய்

எம்மிடம் நீ காட்டிய அன்பின்
எல்லையைக் காணமுடியாமல் நாம் ....
எங்கிருந்து அம்மா மீண்டும் எல்லையற்ற கடலாய் அன்பை
எடுத்தே தூவினாய் உன் பேரக்குழந்தைகள் மீது

இயற்கை என்பதே இறைவன் என்றால்
இறைவன் படைத்த பாத்திரங்களுள் அம்மா?
ஈடு செய்ய யாருமில்லை உன்னொருத்தியின்
இணையற்ற பாசமிகு பாத்திரத்தை

உன் நெஞ்சினில் ஈரம் கொண்டாய்
உன் கண்களில் கருணை கொண்டாய்
உன் கைகளில் ஆதரவு கொண்டாய்
உன் சொல்லில் கனிவு கொண்டாய்

ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினமாய்
உருண்டு கொண்டே போகின்றது
ஒன்பது வருடங்களாய் என் அன்னையர் தினங்கள்
ஒவ்வொன்றுமே வெறுமையாய் உருளுது

வாழும் போது வாழ்த்துக்கவிதை
வடிக்கச் சந்தர்ப்பம் கிட்டா மைந்தனிவன்
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
சிதறுகின்ற கவிதைப்பூக்களால் உன்னை
சீராட்டி அர்ச்சிக்கின்றேன் அம்மா

உன் நினவின் வழி நின்று
உன் அன்பின் துணை கொண்டு
உலகத்தின் அன்னஒயர் அனைவர்க்கும்
பாதந்தொட்டு வணங்கி வாழ்த்துக்கள் தூவுகின்றேன்

அன்னையரே நீவீர் வாழ்க
அன்னையைப் போலொரு தெய்வம் இல்லை
அன்னைகள் என்னும் உன்னத ஸ்தானத்தை
அடைந்த நீவிர் வானுறைத் தெய்வங்களே

No comments:

Post a Comment